திராவிட சமூக(அ)நீதியும் பட்டியலின அரசியலும் heading image

அரசியல் | தமிழ்நாடு |

திராவிட சமூக(அ)நீதியும் பட்டியலின அரசியலும்

Admin

24 ஏப்., 2026 | 3 min read |

இட ஒதுக்கீட்டை ஒரு நிவாரணமாகப் பார்க்காமல், அதையே முழுமையான சமூக நீதியாகக் காட்டி ஏமாற்றும் திராவிடக் கட்சிகளின் போக்கையும், தலித் கட்சிகளின் செயலற்ற தன்மையையும், பொருளாதார ரீதியாகப் பட்டியலின மக்கள் சந்திக்கும் புறக்கணிப்புகளையும் அலசுகிறது இக்கட்டுரை.

இட ஒதுக்கீட்டை ஒரு நிவாரணமாகப் பார்க்காமல், அதையே முழுமையான சமூக நீதியாகக் காட்டி ஏமாற்றும் திராவிடக் கட்சிகளின் போக்கையும், தலித் கட்சிகளின் செயலற்ற தன்மையையும், பொருளாதார ரீதியாகப் பட்டியலின மக்கள் சந்திக்கும் புறக்கணிப்புகளையும் அலசுகிறது இக்கட்டுரை.

தமிழகத்தில் தலித் அரசியல் என்பது வெறும் 44 தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் அரசியலாக மட்டும் சுருக்கப்பட்டு விட்டதா? சமூக நீதி பேசும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், வேங்கைவயல் மலம் கலப்பு முதல் பள்ளிக் கூட ஜாதி வெறி வரை தீண்டாமையின் கோரமுகம் இன்னும் வீரியமாகவே இருக்கிறது. Photograph: (Image Source: Gemini AI Generated Image)

மருத்துவர் மாரிராஜ், கட்டுரையாளர்

தமிழகத்தில் தலித் அரசியலை வெறும் தேர்தல் அரசியலோடு பொருத்திப் பார்ப்பது ஏற்புடையதா என்றால் நிச்சயமாக இல்லை. ஏனென்றால் தமிழகத் தேர்தல் அரசியலும் அதனால் பெற்ற அதிகார பிரதிநிதித்துவமும் தலித்துகளின் வாழ்வியலில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களை கொண்டு இந்த முடிவுக்கு வருவது ஏற்புடையதாக இருக்கும். தமிழக தேர்தல் என்பது ஜனநாயகத்துக்குரிய எந்த ஒரு விழுமியங்களும் இல்லாமல் ஜாதி, மதம், மிக முக்கியமாக பண அரசியலாக மாறி ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் தலித்துகளுக்கான அரசியல் என்பது வெறும் தேர்தல் அரசியலாக சட்டமன்ற பிரதிநிதித்துவமாக மட்டும் இருக்க முடியாது. ஏனென்றால் தலித்துகளின் பிரதான பிரச்னை அரசியல் அதிகார பகிர்வு மட்டும் அல்ல அவர்களின் பிரதான பிரச்னை தீண்டாமையும், மேலும் மேலும் பெருகிவரும் பொருளாதார சிக்கலும் தான். ஆகவே தலித் அரசியல் என்பதை தேர்தலோடு மட்டுமே சுருக்கிக் கொள்ளக் கூடியது அல்ல.

தமிழகத்தில் 44 தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. அது ஆறில் ஒரு பகுதி. அதே வகையில் தமிழக மக்கள் தொகையில் பட்டியலின மக்களின் விகிதாச்சாரம் என்பது ஐந்தில் ஒரு பகுதி.

ஆனால், தமிழகத்தில் தலித் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரப் பகிர்வாக அவர்கள் பெற்றது என்ன. பட்டியலின ஜாதியினரில் பெரும்பான்மையான மூன்று ஜாதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏதோ ஒரு அமைச்சர் பதவியை நிச்சயமாக அதில் ஒன்று ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை தாண்டி எதையும் அரசியல் அதிகாரமாக அவர்கள் பெற்றதில்லை.

நீங்க விரும்பும் செய்திகள்

மாற்றம் வேண்டாம் என அஜித் சொன்னாரா? ஸ்டாலின் பதிலால் வெடித்த சர்ச்சை; அஜித் தரப்பு விளக்கம்

விஜய் போட்டியிடும் தொகுதியில் சரிந்த வாக்குப் பதிவு: த.வெ.க ஷாக்

நீட் தேர்வு: மேற்கு ஆசியப் போர்- தேர்தல் சவால்களை எதிர்கொள்ளும் தேசிய தேர்வு முகமை

அவர்கள் பெற்ற துறைகள் மூலமாக பட்டியலின மக்களின் வாழ்வியலில் எந்தப் பெரிய மாற்றமும் இது நாள் வரையில் ஏற்பட்டதில்லை.

அப்படியானால் தமிழக அரசியல் அதிகாரம் என்பது யாருக்கானது? 1967-க்கு பிறகு இப்பொழுது வரை தமிழக அரசியலை திராவிட கட்சிகள் தான் கைப்பற்றி இருக்கின்றன. திராவிட கட்சிகள் யாருக்கானது. அது சமூக நீதி என்ற பெயரில் அனைவருக்கும் ஆனது என்று சொல்லப்பட்டாலும் அது பார்ப்பனியத்திற்கு எதிரானது என்று சொல்லப்பட்டாலும் அது நிச்சயமாக அனைவருக்கும் ஆனது இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை.

Dr Mariraj 2

மருத்துவர் மாரிராஜ்

இந்திய அரசமைப்புச் சட்டம் பட்டியலின மக்களுக்கு கல்வி அரசியல் மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு தவிர தமிழகத்தில் பட்டியலின மக்கள் பெற்றிருக்கும் பலன்கள் என்று எண்ணிப் பார்த்தால் பெரிய அளவில் ஒன்றுமில்லை.

இட ஒதுக்கீட்டை சமூக நீதி என்று கொண்டாடும் திராவிட கட்சிகள் இட ஒதுக்கீடு என்பதே சமூக நீதி கிடைக்காத சமூகத்திற்காக வழங்கப்பட்ட ஒரு நிவாரணம் என்பதை மறைத்து, அதுவே சமூக நீதி என்பதை பரவலாக நிறுவி இருக்கின்றன.

சமூக நீதி என்பது ஒரு சமூகத்தின் பொது தத்துவமாக இல்லாமல் போனதால் மட்டுமே அது இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், நீதிமன்றங்களிலும் வலியுறுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன என்ற உண்மையை திராவிட கட்சிகள் மறைக்கின்றன.

தமிழகத்தில் பட்டியலின வன்கொடுமைகள் என்பது இந்தியாவின் எந்த மற்ற மாநிலங்களையும் விட சற்றும் குறைவில்லாதது. அது கடந்த ஐந்து ஆண்டுகளில் முந்தைய ஆண்டுகளை விட 100 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்னை என்பது தமிழகத்தில் சமூக நீதி எவ்வளவு நாறி இருக்கிறது என்பதற்கு உதாரணம். இதைப்போல பல்வேறு வன்கொடுமைகளை பட்டியலிடலாம். நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழகத்தில் பள்ளி வரை ஜாதி வெறியின் நீட்சி , திருநெல்வேலியில் கவின் படுகொலை என என கட்டுரையில் பட்டியலிட்டால் திராவிட தீண்டாமை என்பது எண்ணில் அடங்காது. திராவிட கட்சிகளின் ஆதரவாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியலின வன்கொடுமைகள் மற்ற மாநிலங்களை விட குறைவானது என்று வாதிடுவார்கள். அவர்களுக்கு ஒரு கேள்வி. ஒப்பீடு என்பதை எப்பொழுதும் ஒரு நல்ல தரத்தோடு உள்ள மாநிலத்தோடு செய்ய வேண்டுமா? அல்லது தன்னைவிட பின்தங்கிய மோசமான மாநிலத்தை வைத்து செய்ய வேண்டுமா. சுகாதாரத்தில் ஐரோப்பாவை ஒப்பீடு செய்யும் தமிழகம், வன்கொடுமையில் உத்தர பிரதேசத்தை பீகாரை ஒப்பீடு செய்வது ஒப்பிட்டாளர்களின் அறிவுச் சிறுமையை காட்டுகிறது.

வன்கொடுமைகளில் தமிழக அரசு இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்தால் அது நிச்சயமாக சட்ட நீதியை கூட நிலைநாட்ட தவறி இருக்கிறது என்பதற்கு வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக நிறுத்தி இருப்பதிலிருந்து தெரிகிறது. மலம் கலந்த விஷயம் சமூக அவலம் என்றால், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக நிறுத்திய தி.மு.க எத்தகைய அவலத்தை பட்டியலின மக்களுக்கு எதிராக செய்திருக்கிறது என்பதை வரும் தேர்தல் காட்டும்.

தமிழகத்தில் பட்டியலின மக்கள் சந்திக்கும் வன்கொடுமைகள் என்பவை அமைப்பு ரீதியான வன்கொடுமைகள். ஏனென்றால் காவல்துறை, நீதிமன்றம், அரசு அலுவலகம் மற்றும் அரசு என்று நீக்கமற பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. பட்டியலின மக்கள் தங்கள் சட்ட நீதியை பெறுவதற்கு கூட மிகப்பெரிய போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது.

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளை பற்றி தமிழக அரசு வருடத்தில் இரண்டு முறை நடத்த வேண்டிய கலந்தாய்வுக் கூட்டங்கள் கூட முறையாக நடத்தவில்லை என்பதிலிருந்து வன்கொடுமைகளுக்கு எதிரான அரசின் நிலைப்பாடு தெரிய வருகிறது.

இது தவிர எதிர்க்கட்சிகள், அரசியல்வாதிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், சமூக நீதி என்று முற்போக்கு பேசும் சிந்தனையாளர்கள் என்று எவரும் வன்கொடுமைகளை தடுப்பதற்கான எதிரான ஒரு தொடர்ச்சியான முன்னெடுப்பை செய்யவில்லை என்பதுதான் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இதுபோக சமூக நீதி அமைப்புகளாக சொல்லப்படும் பெரியாரிய அமைப்புகளின் செயல்பாடுகள் வெறும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதை பார்ப்பனர்களின் எதிர்ப்பாக மட்டுமே முன் நிறுத்திவிட்டு இடைநிலை ஜாதிகளின் பார்ப்பனியத்தை கண்டும் காணாமல் செல்வதும், தமிழகத்தில் பார்ப்பனியத்தின் பண்பாட்டு ரீதியான செயல்பாடுகள் குறிப்பாக கோவில்கள் மதச் சடங்குகள் திருவிழாக்கள் என்று அதிகரித்திருப்பதும் அவர்கள் பார்ப்பனிய எதிர்ப்பை திராவிட கட்சிகளின் அதிகாரத்திற்கான வழிமுறையாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்தச் சூழலில் தலித் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. வன்கொடுமைகளில் பட்டியல் இன மக்கள் தன் எழுச்சியாக நீதி கேட்டு போராடும் பொழுது அதை ஆளும் அரசின் சார்பாக தலித் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் நின்று அதை நீர்த்துப் போகும் வேலையை செய்கிறார்கள் என்பதுதான் வெளிப்படையான உண்மை. தமிழக தலித் அரசியல் கட்சிகள் எந்த ஒரு வன்கொடுமையிலும் கள போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி நீதியைப் பெற்றுக் கொடுத்ததற்கான வரலாறு என்பது தமிழக வரலாற்றில் இல்லை. பெரும்பாலும் வன்கொடுமை செய்தவர்களோடு தலித் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் பாதிப்பு ஏற்படுத்தி அவர்களோடு சமரசம் செய்து கொள்ளும் போக்கும் அதிகரித்திருக்கிறது. குறைந்தபட்சம் செயல்படும் தலித் செயல்பாட்டாளர்களின் குரலையும் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குகிறது என்பதுதான் உண்மை.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்திருப்பது என்பதும், அந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கி வந்திருக்கிறது என்பது பட்டியலின மக்களிடையே தி.மு.க ஒரு உளவியல் ரீதியான பயத்தை ஏற்படுத்தி அவர்களை குரல் அற்றவர்களாக மாற்றி இருக்கிறது.

பொருளாதார ரீதியாக பார்த்தாலும் பட்டியலின மக்களின் பங்களிப்பு என்பது அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்தில் இல்லை. அரசு பட்டியலின மக்களுக்கான துணைத் திட்டத்தை ஆண்டுதோறும் அறிவித்தாலும் அதில் உள்ள திட்டங்களுக்கு முறையான நிதியை ஒதுக்காததும் அவ்வாறு ஒதுக்கினாலும் அதை முறையாக செயல்படுத்தாததும் காலம் காலமாக நடக்கக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது.

அரசின் இலவசங்களுக்காக பட்டியலின மக்களுக்கான நிதியை மடை மாற்றுவதும், பொதுத் திட்டங்களில் பயன்பெறும் பட்டியலின மக்களுக்கான நிதியையும் பட்டியலின துணைத்திட்டத்தில் இருந்தே எடுத்துக் கொள்வதும் நடைமுறையில் இருக்கிறது. இதனால் பட்டியலின மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் எதையும் தமிழக அரசு செய்ய முடியாத சூழல் இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் முன்னோடி தொழில் முனைவோர் திட்டத்திற்கு பயனாளிகளின் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கப்படவில்லை. புதிய புதிய பெயரில் திட்டங்களை அறிவிப்பதோடு பட்டியலின மக்களுக்கான முன்னேற்றத்தை செய்துவிட்டதாக தங்களை மார்தட்டிக் கொள்கின்றன. இதுபோல பட்டியலின பழங்குடியின ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில், அவர்களைத் தவிர பிறரையும் பங்குதாரராக இணைத்துக் கொள்ளலாம் என்ற வரையறையின் மூலம் பினாமிகள் பட்டியலின பழங்குடியின தொழில் முனைவரை கட்டுப்படுத்தும் சூழ்நிலையும் நிலவுகிறது.

தி.மு.க அரசு நிரந்தர அரசு பணிக்கோரிய தூய்மை பணியாளர்களை நடத்திய விதம் என்பதும் அவர்களை சாக்கடையில் இறங்கிப் போராடும் அளவிற்கு தள்ளியதும் இந்த திராவிட தீண்டாமையின் கோர முகத்தை காட்டியது.

இதே போல் தான் வெளிநாடு சென்று படிக்கக்கூடிய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டமும். அந்தத் திட்டத்தின் வரைமுறைகள் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களை விட பின்தங்கி இருக்கின்றன என்பதுதான் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த தேர்தல் அறிக்கையில் தி.மு.க உறுதியளித்த பதவி உயர்வில் இட ஒதுக்கீடு 16(4a) நிறைவேற்றப்படவே இல்லை. ஆனால் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அது சட்டமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களை ஒப்பிடும்பொழுது தமிழகத்தில் பட்டியலின மக்கள் அரசியல் பொருளாதாரம் என எல்லாவற்றிலும் பின்தங்கியே இருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் தமிழக பட்டியலில் இன மக்கள் தங்கள் மனித மாண்பை மீட்டெடுப்பதற்காக போராடுவதே வாழ்நாள் நோக்கமாக மாறி உள்ள பொழுது தமிழக தேர்தல் அரசியலில் அரசியல் அதிகாரத்திற்கான போட்டி என்பது வெறும் கானல் நீராகவே இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னது போல அரசியல் என்பது மக்களுக்கானதாக இல்லை என்றால் அது வெறும் அதிகாரப் பசிக்காகவே இருக்கும்.

தமிழக பட்டியலின மக்களின் முன்னேற்றம் என்பது வெறும் தேர்தல் அரசியலோடு நின்றுவிடாமல் பண்பாட்டு ரீதியில் தங்களை மீட்டு எடுத்துக் கொள்வதும், பார்ப்பனியத்திலிருந்து தங்களை அந்நியப்படுத்திக் கொள்வதும், பட்டியலின பண்பாட்டு மற்றும் சமூக அமைப்புகளை பலப்படுத்துவதும் தான் ஒரே வழியாக இருக்க முடியும். ஏனென்றால் தமிழக அரசியலில் 44 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க பட்டியலின மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை. குறிப்பாக பதவி உயர்வில் இட ஒதுக்கீடு16 (4a), நிரப்பப்படாத பட்டியலின அரசு பணிகளை நிரப்புதல், ஆணவ படுகொலைக்கான தனிச்சட்டம் என எதையும் நிறைவேற்றவில்லை.

இந்த சூழலில் பா.ஜ.க உள்ளே புகுந்துவிடும் என்ற ஒரே வாதத்தை மீண்டும் மீண்டும் தி.மு.க தரப்பு முன்வைக்க முடியாது. பா.ஜ.க சித்தாந்த ரீதியாக ஜாதியற்ற பட்டியலின மக்களுக்கு எதிரி என்றால் சமூக நீதிப் பேசிக்கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு வன்கொடுமைகளையும் நிகழ்த்திய தி.மு.க அரசு துரோகி அல்லவா.

பட்டியலின மக்களின் விடுதலை என்பது தீண்டாமை ஒழிப்பு மற்றும் பொருளாதார சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் தான் இருக்கிறது. இவை இரண்டையும் உறுதி செய்யும் அரசே சமூக நீதி அரசு. இவற்றை இனி வரும் அரசுகளாவது செய்யுமா என்பதே முக்கியமான கேள்வி.

இந்த கட்டுரையை எழுதியவர் மருத்துவர் மாரிராஜ், பொது அறுவைசிகிச்சைத் துறை நிபுணர்.

முக்கிய அம்சங்கள்